சென்னை மெட்ரோ ரெயில் கட்டணம் குறைப்பு: அமலுக்கு வந்தது

திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2021      தமிழகம்
Metro-Rail-2021-02-22

Source: provided

சென்னை : சென்னையில் மெட்ரோ ரெயில் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. கட்டண குறைப்பு பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், 45 கிலோ மீட்டா் தொலைவுக்கு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவடைந்து, விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை நீல வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை வரை பச்சை வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து மெட்ரோ ரெயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த உடன் அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சராசரியாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வரையிலான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051கி.மீ. தொலைவில் முதல்கட்ட நீட்டிப்பு திட்டப் பணிகள் முடிந்து, ரெயில் சேவை கடந்த 14–ம்தேதி தொடங்கியது.

இந்த இரு மாா்க்கத்திலும் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆகவும் இருந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை பரீசிலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டார். அதன்படி மெட்ரோ ரெயில் புதிய கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. அதிகபட்ச கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கட்டணம் விவரம் வருமாறு:–

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமானநிலையம்- – மீனம்பாக்கத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். விமானநிலையம் – -கோயம்பேடுக்கு ரூ.40 ஆகவும், விமானநிலையம்- – தேனாம்பேட்டைக்கு ரூ.30 ஆகவும், விமானநிலையம் – -நங்கநல்லூருக்கு ரூ.20 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோயம்பேடு – -சென்ட்ரலுக்கு ரூ.30 -ஆகவும், சென்ட்ரல்- – பரங்கிமலைக்கு ரூ.40 -ஆகவும், கோயம்பேடு – -விம்கோ நகருக்கு ரூ.50- ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு கி.மீ. வரை ரூ.10 கட்டணம் இருக்கும்.

பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், கி.யூ.ஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கட்டணம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து