முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி அமைக்க அவரது பிறந்த நாளில் சபதம் ஏற்போம்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 'விவசாயி' வீட்டுப் பிள்ளை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி தமிழகத்தில் அமைக்க சபதம் ஏற்போம் என்று முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ்.முத்துமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு:-

கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழும் அம்மாவின் 73-வது பிறந்த நாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நாடெங்கிலும் இன்று கொண்டாடப்படுகிறது. 

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் அம்மா. 1991, 2001 மற்றும் 2011, 2016 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் கழகத்தை அமோகமாக வெற்றிபெறச் செய்து பல்வேறு சோதனைகளை முறியடித்து 6 முறை முதலமைச்சர் பொறுப்பேற்று நல்லாட்சி தந்தார்.

தன் இறுதி மூச்சுவரை புரட்சித்தலைவர் வழியில் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினார்.கடந்த 16-11-1992-ல் உச்சநீதிமன்றம் (9 நீதிபதிகள் அமர்வு) 'இந்திரவகானி' வழக்கில் இட ஒதுக்கீடு எந்த வகையிலும் 50 விழுக்காடுகளை தாண்டக் கூடாது என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பெரும் பாதிப்பை நிவர்த்தி செய்திட 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து, அரசியலமைப்புச் சட்டம் அட்டவணை 9-ன் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுத் தந்தவர் 'சமூகநீதி காத்த வீராங்கனை'  அம்மா .

அண்ணா, புரட்சித்தலைவர் வழியில் ஈழத் தமிழர் தம் உரிமைகள் காக்க போர்க்குரல் எழுப்பியும், தீர்மானங்கள்  நிறைவேற்றியும்,  உலகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கியவர் அம்மா. காவிரி நீர் பிரச்சினையில் இறுதி தீர்ப்பை 19-12-2013-ல் மத்திய அரசு கெஜட்டில் பதிவு செய்து காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் நதிநீர் பங்கீடு குழு அமைக்க வழி வகுத்தார். பெரியாறு அணை நீர்மட்ட பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்டினார்.தமிழ்நாடு மீனவர்களின் அவலம் தீர மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது  நடைபெற்று வருகிறது.

காலத்தை வென்ற திட்டங்கள்

புரட்சித் தலைவரின் சத்துணவு திட்டம் அம்மா கொண்டுவந்த அரசு தொட்டில் குழந்தை திட்டம் ஆகியவை காலத்தை வென்ற திட்டங்களாகும். அம்மா உணவகம் ஏற்படுத்தி ஏழை,எளிய உழைக்கும் மக்களின் பசியைப் போக்கினார். அம்மா 'இலவசம்' என்ற வார்த்தைக்கு பதிலாக 'விலையில்லா' என்ற வார்த்தையை கண்டுபிடித்த சமூக 'அரசியல் விஞ்ஞானி' அம்மா.  குடும்ப அட்டைக்கு விலையில்லா 20 கிலோ அரிசி, மிக்சி கிரைண்டர், ஃபேன், தாலிக்கு தங்கம், பெண்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன், 30 சதவீத ஒதுக்கீடு, உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு, மகளிர் சுய உதவி குழுக்கள் மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் நீதிமன்றங்கள், குழந்தை பாதுகாப்புக்கு 15 அம்ச திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு 40 சதவீத மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், பிறக்கும் குழந்தைக்கு பரிசுப்பெட்டகம், பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறைகள், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் சீருடை உள்ளிட்ட படிப்புக்கு தேவையான அனைத்து பொருட்கள் வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், அனைத்து சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா 100 யூனிட் மின்சாரம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்றவை மக்களின் பெரும் பாராட்டைப் பெற்றன.

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அன்னதான திட்டம், சில்லறை வணிகத்தில் தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு செய்ய விடாமல் தடுத்தது, நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி ஒதுக்கியது, இஸ்லாமியருக்கு 'உலமா பென்சன்' உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள், நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள்,  உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 9,10-10-2015-ல் ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது, தமிழ்த்தாய் விருது, கபிலர், உ.வே. சாமிநாத அய்யர், கம்பர் மற்றும் தமிழ்ச் செம்மல் விருது உள்ளிட்ட 18 விருதுகள் வழங்கி ஆணை பிறப்பித்தார். டெல்லியில் ரூபாய் 50 லட்சம் செலவில் தமிழ் இருக்கை மற்றும் அமெரிக்காவில் 'ஹார்வார்ட்' பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடி செலவில் தமிழ் இருக்கை உருவாக்கியது எல்லாம் அம்மாவின் பெரும் சாதனைகள்.

அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டம் - அன்னை தெரசாவின் பாராட்டைப் பெற்றது. மழை நீர் சேகரிப்புத் திட்டம் - டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டை பெற்றது. சுனாமி நடவடிக்கைகள் - அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டனின் பாராட்டையும், உலக நாடுகளின் பாராட்டையும் பெற்றது. இந்திய அரசியல் அரங்கில் முக்கிய முடிவுகள் எடுக்க பல பிரதமர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போன்றோர் நேரில் வருகை தந்து அவரை சந்தித்தது தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது மிகப்பெரிய பெருமையாகும்.

தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகளை காக்க தமிழர் இனமானம் காக்கும் வகையில் அண்ணாவின் அரசியல் கொள்கைகள் காக்க புரட்சித்தலைவரின் மனிதநேய திட்டங்கள் தொடர தமிழ்நாட்டின் உரிமைகள் காத்திட 'விவசாய வீட்டு பிள்ளை' அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மீண்டும் அமைத்திட இந்நாளில் நாம் அனைவரும் வீர சபதம் ஏற்போம். திராவிட வெற்றி வரலாறு படைப்போம்.

எஸ்.முத்துமணி 

முன்னாள் எம்.பி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து