தி.மு.க. - வி.சி. தொகுதி உடன்பாடு கையெழுத்து: 6 தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டி: திருமாவளவன் பேட்டி

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      அரசியல்
thirumavalavan-2021-03-04

தி.மு.க- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருமாவளவன் -மு.க.ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்  என்று திருமாவளவன் தெரிவித்தார். 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்தது.  2011 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இந்தமுறையும் 10 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. தி.மு.க.வுடன் நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது, இத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக் கொண்டார். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இந்த முறை அதிக கட்சிகள் உள்ளதால் அதிகபட்சம் 5 தொகுதிகள் தான் ஒதுக்கமுடியும் என்று கூறப்பட்டது. 

எனவே முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறும் போது, தி.மு.க.வுடன் விரைவாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம். 2 நாட்களில் நல்ல தகவல் வரும் என்று கூறியிருந்தார். 

அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் நேற்று முன்தினம் மாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனால் அண்ணா அறிவாலயத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.  விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் முயற்சியாக இருதரப்பிலும் தொலைபேசி வழியாகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியானது. 2 பொதுத் தொகுதிகள் 4 தனித் தொகுதிகள் என 6 தொகுதிகள் வழங்க தி.மு.க. முன்வந்து உள்ளது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உடன்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தி.மு.க- விடுதலை சிறுத்தைகள் கட்சி  இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தி.மு.க தரப்பில் கட்சி தலைவர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 3 கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க 11 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்  6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில் எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டது. 

2017-ல் இருந்தே தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்திகள் கட்சி  இணைந்து செயல்பட்டு வருகிறது . தி.மு.க. வழங்கிய 6 தொகுதிகளை ஏற்று போட்டியிடுவது என்று முடிவெடுத்துள்ளோம். 6 தொகுதிகளை ஏற்க கூடாது என்று உயர்நிலை செயல்திட்டக்குழுவில் வலியுறுத்தினர். 6 தொகுதிகளை பெற விடுதலை சிறுத்தைகள் கட்சியில்  எதிர்ப்பு இருந்தாலும் வாக்குகள் சிதறக்கூடாது என உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. 6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும்.  6 தொகுதிகளில் பொதுத் தொகுதி உள்ளதா என்பது குறித்து பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து