24 மணி நேரமும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும்: கட்சியினருக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வேண்டுகோள்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      தமிழகம்
EPS-OPS-2021-02-22

Source: provided

சென்னை : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை விழிப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. பேரியக்கத்தை தொடங்கி, பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். அதேபோல், எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான அம்மா, தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்து, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை நிகழ்த்தினார். நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு ஆட்சிப் பொறுப்பேற்ற அம்மாவின் அரசு, மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

அந்த வகையில் கழக அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளாடு, அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க.வினரின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும், தாண்டி 6.4.2021 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

மேலும் கழக உடன்பிறப்புகளுக்கும், முகவர்களுக்கும் அதே போல் கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.வாக்குப்பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற மே 2 - ந் தேதி அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும், கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும், கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு - பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து