மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைக்கிறார்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Ma Subramanian 2021 07 21 - Copy

Source: provided

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை விரைவில் முதல்வர் துவக்கி வைக்கிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நியூமோகோக்கல் தடுப்பூசி செலுத்துவதை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

தவறுதலாக பிளீச்சீங் பவுடரைச் சாப்பிட்டதால் அதீத எடையிழப்பு, உணவு உண்ண முடியாமல் போனதால், கிசிச்சை பெற்று வரும் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமிக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதையும், 10 வயதுச் சிறுவனுக்கு தாடையில் அதிவேகமாக வளரும் கட்டி அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதையும், 3 வயதுச் சிறுவனுக்கு, உலகத்திலேயே நான்கு பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட பால்லோஸ் டெஸ்ட்ரோலஜி எனும் இதய நோயால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளதையும் பார்த்து நலம் விசாரித்தார்.

இதன்பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தினந்தோறும் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசிகள் போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி மூன்று தவணைகளாக ரூ.12 ஆயிரம் கட்டணத்தில் செலுத்தப்படுகிறது. இந்தச் சேவையோடு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி செலுத்திடும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஒன்றரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும், மூன்றரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும், ஒன்பதரை மாதத்தில் ஒரு தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. முதல் தடுப்பூசி போட்ட பிறகு குறுஞ்செய்தி வாயிலாக அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்தப்படும் தேதிகளும் அவர்களது செல்பேசிக்குத் தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றன. எழுபது ஆயிரம் தடுப்பூசிகள் இதுவரை வரப்பெற்றுள்ளன. அவை முதல் தவணையாக தற்போது போடப்பட்டு வருகின்றன. மக்களைத்தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை மிக விரைவில் முதல்வரே நேரடியாக கலந்து கொண்டு தொடங்கி வைக்க இருக்கிறார்.  இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து