முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் எதிரொலி: தமிழகத்தில் முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிப்பு

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஆடி கிருத்திகையை முன்னிட்டு, தமிழகத்தில் முக்கிய கோயில்களில் வரும் 9-ம் தேதி வரையில் பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கு தடை விதித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா தொற்று வரும் 9-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் நேற்று முதல் வரும் 9-ம் தேதி வரையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் என குறிப்பிட்ட இடங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து சென்னை, மதுரை, பழனி  உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகம் 3-வது கோவிட் அலையை கட்டுப்படுத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இதனையடுத்து மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்,மதுரை மீனாட்சி அம்மன்கோவில்,அழகர்கோவில், பழமுதிர்சோலை, ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வரும் 2-ம் தேதி முதல் 9 -ம் தேதி வரையில் தடை விதித்து மாவட்ட நிர்வாகம்உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மதுரை கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், அழகர்கோவில், பழமுதிர்சோலை மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் நாளை 02.08.2021 முதல் 08.08.2021 வரை நடைபெறவிருக்கும் ஆடி கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக திருக்கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், பொதுமக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக இந்தத் திருவிழா மற்றும் பொது தரிசனத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதல் 9-ம் தேதி வரை வட பழனி முருகன் கோயில், கந்தகோட்டம் கந்தசாமி கோயில், சூளை அங்காள பரமேஸ்வரி கோயில், பாடி படவேட்டம்மன் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் பக்தர்கள் நேரடி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஆகமவிதிபடி, கால பக்தர்கள் இன்றி கால பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஈரோடு கலெக்டரும் முக்கிய அறிவிப்பை வெளியி்ட்டுள்ளார். அதாவது ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதே போல் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து