மகராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்‍கு தடை

Vinayagar-2021-09-09

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் முக்கிய மத நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதே போல் மகராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்‍கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மகராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொது இடங்களில் மண்டபம் அமைப்பதோ, பந்தல் அமைப்பதோ கூடாது என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது. மக்‍கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகரை வழிபடவும், பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்‍கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கூட பண்டிகைகளை கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ள மும்பை மேயர், ஆனால் தற்போதைய சூழலில் உடல் நலனே முக்‍கியம் என்று கூறியுள்ளார்.

இதே போன்று டெல்லியில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கும் அனுமதியில்லை என்று அறிவித்துள்ள ஆணையம், பொதுமக்களுக்கு இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு டெல்லி அரசை கேட்டு கொண்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து