முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4 முதல்வர்கள் மாற்றம்; காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 12 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் ஆறே மாதங்களில் 4 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் அக்கட்சியில் தேசிய தலைவர்களின் ஆதிக்கம் உறுதியாகி இருப்பதாகாவும் உள்ளூர் தலைவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், விமானர்சனங்கள் எழுந்துள்ளன.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகுவது தொடர்கதையாகி உள்ளது. அந்த வரிசையில் நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மாற்றப்பட்டுள்ளார். பா.ஜ.க. மேலிடம் உத்தரவுப்படி இந்த ஆண்டு மட்டும் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலகும் 5-வது நபர் ரூபானி.

ஆண்டு தொடக்கத்தில் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மாற்றப்பட்டு திராத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார். 4 மாதங்களே அவர் பதவியில் நீடித்த நிலையில் அவரும் நீக்கப்பட்டு புஷ்கர் சிங் தாமி முதல்வராக  நியமிக்கப்பட்டார். அதேபோல அசாமில் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்து சர்பானந்த சோனாவாலை நீக்கவிட்டு ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை பா.ஜ.க. நியமித்தது.

கர்நாடகாவில் 3 மாதங்களுக்கு முன் எடியூரப்பாவை பதவி விலக சொல்லிவிட்டு பசவராஜ் பொம்மையை முதல்வராக அறிவித்தது பா.ஜ.க. மேலிடம்.

முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எடியூரப்பாவை தவிர மற்றவர்கள் எந்த முணுமுணுப்பும் இல்லாமல் மேலிடத்தின் முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எடியூரப்பா மட்டும் அதிருப்தி தெரிவித்தாலும் கடைசியில் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்று உறுதியாகி இருப்பதாகவும், முதலமைச்சர்கள் உள்பட மாநில தலைவர்களை ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை என்பது தெளிவாகி இருப்பதாகவும், அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2018-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் மோடி அலை பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகி உள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா தோல்வியை தழுவியது. இருப்பினும் மத்திய பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது. இத்தகைய சூழலில் அடிக்கடி முதல்வர்களை மாற்றுவதன் மூலம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாக தோல்விகளை அக்கட்சி மறைக்க முயல்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா பாதிப்பை சமாளிப்பதில் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத் தோல்வி அடைந்ததை மறைக்கவே ரூபானியை முதலமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்கியிருப்பதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மொத்தத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உட்கட்சி பூசலும் பதவிச்சண்டையும் நிறைந்து காணப்படுவதையே முதலமைச்சர் மாற்றங்கள் உணர்த்துவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து