முக்கிய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் தொடர் போராட்டம்: காங். பொதுச் செயலர் அறிவிப்பு

Congress 2021 10 24

Source: provided

புதுடெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 15 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். தேசிய தலைநகர் டெல்லியில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.97 ஆகவும் உயர்த்தப்பட்டது. மும்பையில், ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ .113.12 மற்றும் ரூ. 104.00 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக வரும் நவம்பர் 14 முதல் 29-ம் தேதி வரை காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து வருகிற நவம்பர் 14 முதல் நவம்பர் 29-ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். கிட்டத்தட்ட 15 நாட்கள் நடத்தப்படும் இந்த போராட்டத்தில், ஒரு வாரம் பாத யாத்திரை நடத்தப்படும். மாநில காங்கிரஸ் கமிட்டிகள் அந்தந்த பகுதிகளில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து