முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று 'ரெட் அலர்ட்' 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட  6 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில்  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்தத மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. 

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (நவ. 26) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிககனமழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். மழை அளவை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடல் பகுதியில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று (நவ. 26) சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், இன்று (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர் கனமழையால் 12 மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (நவ.26)  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மழையின் தீவிரத்தால் இன்று (நவ.26) திருநெல்வேலி , தூத்துக்குடி , புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், மதுரை, தேனி, தென்காசி, பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள். மேலும், ராமநாதபுரம்,  திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து