முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்றும், தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கணித்து தெரிவித்துள்ளது.

நேற்று இதுதொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை - காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும்; பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இன்று (நவம்பர் 27) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 28-ம் தேதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 29-ம் தேதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை , புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ. 30-ம் தேதி: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள்

இன்று குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் இதன் காரணமாக நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் அந்தமான் கடற் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த சில தினங்களாக பெய்துவந்த தொடர்மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், இனி வரும் நாள்களில் கணிக்கப்பட்டுள்ள மழையின் அளவு, அதனால் ஏற்படவுள்ள சேதங்கள் போன்றவற்றை கணக்கில்கொண்டு, அடுத்து வரும் 2 தினங்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், அதை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து