முக்கிய செய்திகள்

சட்ட மசோதா நாளை தாக்கல்: பார்லி. நோக்கிய பேரணியை ஒத்திவைத்தனர் விவசாயிகள்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      இந்தியா
Farmers 2021 11 27

Source: provided

புதுடெல்லி : சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யும் வகையில், பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், திட்டமிடப்பட்டிருந்த பாராளுமன்றம் நோக்கிய பேரணியை விவசாயிகள் ஒத்திவைத்துள்ளனர்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, விவசாயிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர். முன்னதாக, போராட்டத்தை கைவிடுமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயிகளிடம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த வாரம், மூன்று வேளாண் திருத்த சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், பாராளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் அதிகாரப்பூர்வமாக திரும்ப பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

குறைந்தபட்ச ஆதார விலை குறித்து சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு மத்தியில், திங்கள்கிழமை பாராளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து