முக்கிய செய்திகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர்கள் வழங்கினர்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
EvaVelu 2021 11 28

Source: provided

சென்னை : வடமேற்கு பருவ மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர் எ.வ.வேலு நேற்று வழங்கினார். 

சிந்தாதிரிப்பேட்டை மார்கெட் அருகில் உள்ள காமாட்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் சேப்பாக்கம் தி.மு.க. செயலாளர் மதன்மோகன் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே. சேகர் பாபு தலைமையில், தையல் மெஷின்கள், ஆன்லைன் மூலம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செல்போன்கள், லேப்டாப்கள், மிதிவண்டிகள், மிக்சிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பைகள் ஆகியவை வழங்கப்பட்டது. 

அதை தொடர்ந்து, ராஜா அண்ணாமலை மன்றத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் எ.வ.வேலு, 300 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.2000 மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.500/- பண முடிப்பும் வழங்கினார். மேலும் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு ஆட்டோ ஒட்டுனருக்கு ஒரு புதிய ஆட்டோ வழங்கினார்.  

அதை தொடர்ந்து வில்லிவாக்கம், சிட்கோ நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலா ஏற்பாடு செய்திருந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அமைச்சர்கள் எ.வ.வேலு,  பி.கே.சேகர்பாபு ஆகியோர் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பை முடிப்பு சுமார் 500 நபர்களுக்கு வழங்கினர். மேலும், செல்வி நகர் 70 அடி சாலையில் உள்ள வடிகால்களை மழைநீர் தேங்காமல் வடிவதை அமைச்சர்  பார்வையிட்டார். அதை தொடர்ந்து குமரன் நகரில் உள்ள வடிகால்களில், மழைநீர் தேங்காமல் ஓடுகிறதா என்று அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து