முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 1 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

12 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இரு அவையிலும் நேற்று 3-வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அவை மரபை குலைக்கும் வகையில் செயல்பட்ட மாநிலங்களவையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனாவை சேர்ந்த தலா 2 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலா ஒரு எம்.பி.யும் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாதபடி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த 16 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையிட்டனர். ஆனால், அவர் சஸ்பெண்டு உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் முதல் எழுப்பி வருகிறார்கள். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு விவகாரத்தை நேற்றும் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் எழுப்பினார்கள். சஸ்பெண்டு உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று இரு அவையிலும் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

12 எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்யக்கோரி மாநிலங்களவையில் அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் காணப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. முதலில் மதியம் வரையிலும், பின்னர் 3 மணி வரையும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும் இதே பிரச்சினையை எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் எழுப்பியதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து