முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை பிடிவாதமாக நிறைவேற்றுவதா ? மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு.,

”கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் - இப்போது ஆளுங்கட்சியாகவும் இந்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. 

அணைப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றக் கூடாது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது, ஒருமனதாக ஆதரித்துள்ளோம். அதையும் மீறி, 2.8.2019 அன்று இந்த மசோதாவினை மத்திய பாஜக அரசு மக்களவையில் கொண்டு வந்தபோது, அதில் பங்கேற்றுப் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதா என்பது அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான கடும் தாக்குதல். ஆகவே, இந்த மசோதாவைத் திரும்பப் பெறுங்கள் என எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (2.12.2021) இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டபோது பேசிய திருச்சி சிவா எம்.பி., “ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ் இயங்குவதுதான் நமது அரசியல் சட்டத்தின் சிறப்பம்சம். ஆனால் இந்த மசோதா மாநில அரசுகளிடம் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பறித்து, மத்திய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை அளித்துவிடும்” என்றும்; “அணைகள் மாநிலத்தினுடையது. எனவே அதன் பாதுகாப்பும் எங்களுடையது. ஆனால், இந்த மசோதா அரசியல் சாசனத்தின் விதி 252-ஐ மீறுவதாக உள்ளது. அணைப் பாதுகாப்பு என்பதைவிட மாநில அரசுகளின் அதிகாரப் பாதுகாப்பே இப்போது கேள்விக்குரியதாகியுள்ளது” என்று டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி.யும் அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்து - வலுவாக எதிர்த்துப் பேசி - இந்த மசோதாவைத் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிட வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள்.

தி.மு.க சார்பில் இந்த மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா திருத்தம் கொடுத்து - அந்தத் திருத்தத்தின் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. தி.மு.கவின் இந்தத் திருத்தத்தை மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ளன. குறிப்பாக அதி.மு.க உறுப்பினர்களும் ஆதரித்த நிலையில் - தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி - அணைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டியதில்லை என்று முடிவு செய்து - இந்த அணைப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருப்பது “மத்திய - மாநில அரசுகளுக்கு” இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.

தி.மு.க மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக - நாடாளுமன்ற மரபுகளுக்கோ, இவற்றைக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திற்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மத்திய பாஜக அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து