முக்கிய செய்திகள்

டெல்லியில் வருடாந்திர உச்சி மாநாடு: அதிபர் புடின் இன்று இந்தியா வருகை : 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Putin-Modi 2021 12 04

Source: provided

புதுடெல்லி : 21-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புடின் இன்று இந்தியா வருகிறார். அப்போது இந்தியா - ரஷ்யா இடையே 10 முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா நாடுகளிடையேயான 21-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  இன்று டெல்லி வருகிறார். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் மேற்கொள்ள உள்ள முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.  

இருநாட்டு தலைவர்களும் சர்வதேச பிரச்சினைகள் மற்றும் பல்வேறு துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தியா - ரஷ்யா இடையே முக்கியமான 10 இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன என்று ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன.

அப்போது, எஸ் 400 வகை ஏவுகணை அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது, ஏகே 203 வகைத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது உட்படப் பாதுகாப்புத் துறையில் பல்வேறு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட உள்ளன.

ககன்யான் திட்டத்துக்கு இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ், பாதுகாப்பு அமைச்சர் செர்ஜீ சொய்கு ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்த உள்ளனர். சென்னைக்கும் ரஷ்யாவின் தூரக்கிழக்கில் உள்ள விளாடிவாஸ்டாக் துறைமுகத்துக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் உடன்பாடு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து