முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 கோடி ரூபாய் செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் : சீரமைக்கும் பணி தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரூ.29 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சீரமைக்கும் பணி தொடங்கியது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் புதிய புத்தகங்கள், மின் புத்தகங்கள் மற்றும் அனைத்து புதிய நூல்களும் அண்ணா நூலகத்தை அலங்கரிக்கும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010-ம் ஆண்டு 3.75 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.197.43 கோடி செலவில் கட்டப்பட்டது. 9 மாடிகளை கொண்ட இந்த நூலகம் தெற்காசியாவிலேயே 2-வது பெரிய நூலகம் ஆகும். இந்த நூலகத்தை புதுப்பொலிவுடன் புனரமைக்கவும், கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ரூ.29 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த வாரம் தொடங்கியது. பாழடைந்த நிலையில் கசியும் மேற்கூரைகளும், சேதம் அடைந்த கண்ணாடிகள், மின்விசிறிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. நூலகத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் புதுப்பொலிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் 9 மாடிகளிலும் பழுதடைந்த சுவர்கள், இருக்கைகள், படிக்கட்டுகள், மரச்சட்டங்கள், குடிநீர் குழாய்கள், கழிவறைகள் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆடிட்டோரியங்கள், மாநாட்டு அரங்கங்களும் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படுகின்றன். மென்பொருள் மற்றும் தொழில் நுட்ப சாதனங்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன. மின்னுலகம் உருவாக்கி உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 6 லட்சம் புத்தகங்களை புதிய தொகுப்பாக வாங்க மாநில அரசு ரூ.5 கோடியும் மின் புத்தகங்கள் மற்றும்மின் இதழ்களுக்காக ரூ.1.5 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தக படைப்புகளை காட்சிப்படுத்த எல்.இ.டி. சுவர்களும் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. புத்தக அலமாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் புதிய புத்தகங்கள், மின் புத்தகங்கள் மற்றும் அனைத்து புதிய நூல்களும் அண்ணா நூலகத்தை அலங்கரிக்கும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து