முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுங்கள்: தமிழக அரசுக்கு எடப்பாடி வலியுறுத்தல்

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகத்தில் திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொரோனா நோய்த் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.  தற்போதைய சூழ்நிலையில், நாளொன்றுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக இந்த அரசே செய்திக் குறிப்பினையும் வெளியிடுகிறது. ஆனால், உண்மையில் 50 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களும், மருத்துவர்களும் தகவல் தெரிவிக்கின்றனர். 

2020-ம் ஆண்டு மே மாத காலக்கட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த, ஸ்டாலின், டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்தான் கொரோனா தொற்று பரவுகிறது என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.  மேலும், ஸ்டாலின் உட்பட அவரது கட்சியினர் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி, தங்கள் வீடுகள் முன்பு கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், தினமும் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் தற்போதைய வேளையில், டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது என்ன நியாயம்?

தமிழக மக்களின் உயிரைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தி.மு.க. அரசு, தங்களுடைய கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து வைப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது. ஆகவே, இந்த தி.மு.க. அரசு கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து