முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி தமிழ் அல்ல! முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

2010 முதல் 2019-ம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழுக்குச் செம்மொழித் தகுதி ஏற்பட வேண்டும் என்பது தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றியவர்தான் நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.  தமிழ் - குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல,  ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி. 

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன. இப்படிப் பல மொழிகளை உருவாக்கும் திறன்கொண்ட மொழிதான், நமது தாய்மொழியான தமிழ்.  மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ்மொழி ஆகும். 

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது.   தொல் பழங்காலம் முதல் கி.பி. 6-ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த நிறுவனம், தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில் செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. 

முதல் விருது 2010, ஜூன் 23-அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அன்றைய ஜனாதிபதியால்  பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோபார்ப்போலாவுக்கு வழங்கப்பட்டது. தமிழுக்கு, தமிழறிஞர்களுக்குச் செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து