முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடியில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் 130 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணியினை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வாழும் நகர எளிய குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் உள்ள 11 ஏக்கர் நிலத்தில் 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்படவுள்ளது. 

ஒவ்வொரு குடியிருப்பும் 411 சதுரஅடி கட்டுமானப் பரப்பில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை ஆகியவற்றுடன் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான குடிநீர்வசதி, மின்சாரம் போன்ற வசதிகளுடனும் கட்டப்படும். 

இத்திட்டப்பகுதியில் சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளை சுற்றி நடைபாதை, மழைநீர்வடிகால், மழைநீர் சேமிப்பு அமைப்பு, பூங்கா, தெருமின்விளக்கு மற்றும் சுற்றுசுவர் போன்றவை அமைக்கப்படும். மேலும், இத்திட்டப்பகுதியில் நியாய விலைக்கடை, சமுதாயக் கூடம், அங்கன்வாடி, சுகாதார நிலையம், வாழ்வாதார மையம், நூலகம், வாகனம் நிறுத்துமிடம், திறந்தவெளிசந்தை, உடற்பயிற்சி நிலையம், கடைகள், பேருந்து நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்படும். இக்குடியிருப்புகள் காரைக்குடி நகராட்சியில் நீர்நிலை அருகில்  குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன். தா.மோ. அன்பரசன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ்,  சிவகங்கையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். மாங்குடி, ஆ. தமிழரசி, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ப. மதுசூதன் ரெட்டி அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து