முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
corona- 2022 03 31

நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் 3 மாதமாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரே நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்தும் முடக்கப்பட்டது. வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் “என்னடா இது நோய்” என்று புலம்பினார்கள். இதன் பிறகு கொரோனா பரவல் வேகம் எடுத்தது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் விளக்கு ஏற்ற வேண்டும், வீடுகளின் முன்பு நின்று கொண்டு மேளம் அடித்து ஒலியை எழுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் கொரோனா இதற்கெல்லாம் அஞ்சவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை, 3-ம் அலை என ஆண்டுதோறும் திரும்ப... திரும்ப வந்து மக்களை பாடாய்படுத்தியது. இப்படி கடந்த 2 ஆண்டுகளாக மக்களை வாட்டி எடுத்த கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. கொரோனா பரவல் குறைய குறைய மாநில அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதன்படி கொரோனா பரவல் குறைவதை கணக்கில் கொண்டு மாநில அளவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இப்படி படிப்படியாக நீக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் கொரோனா பயம் நீங்கி மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கி கொள்ளலாம் என்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தொற்று நோய் மேலாண்மையில் நோய் பரவலை கண்டறிதல், தடுப்பூசி போடுதல், உரிய சிகிச்சை அளித்தல் என மருத்துவ மேம்பாட்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன.

பொதுமக்கள் மத்தியிலும் கொரோனா குறித்து முழு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் இனியும் வேண்டாம் என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. கொரோனா பரவல் விகிதமும் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மாநில அரசுகள் விலக்கி கொள்ளலாம். புதிதாக எந்த கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு இனி விதிக்காது என்றும் மத்திய அரசின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. தற்போது எந்த மாநிலத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் பெரிய அளவில் நடைமுறையில் இல்லை. தமிழகத்திலும் கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இன்று முதல் சிறிய அளவில் உள்ள கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அரசின் நீச்சல் குளங்கள் திறக்கப்படாமலேயே இருந்தன. நீச்சல் குளத்தை திறந்தால் அனைவரும் ஒரே இடத்தில் திரண்டு குளிப்பார்கள். இதனால் நோய் பரவுமோ என்கிற அச்சமும் இருந்து வந்தது. ஆனால் கொரோனா பரவல் விலகி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட காரணத்தால் இன்று முதல் நீச்சல் குளங்கள் அனைத்தும் திறக்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் 3 மாதமாவது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறைகள் எங்கும் கடைபிடிக்கப்படுவது இல்லை. முகக்கவசம் அணியும் பழக்கத்தை பெரும்பாலான மக்கள் கைவிட்டு விட்டனர். சமூக இடைவெளியும் எங்கும் பின்பற்றப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து