முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெட்மயர் தாயகம் திரும்பினார்: ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு

திங்கட்கிழமை, 9 மே 2022      விளையாட்டு
Rajasthan 2022 05 09

Source: provided

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் 25 வயதான ஹெட்மயர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.  இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். 

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை. 

_____________

டோனி பேட்டை கடிக்க காரணம்: விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா

டோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. டோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''டோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார்'என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். டோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.

_____________

பொல்லார்டை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர் வலியுறுத்தல்

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆதிகாரபூர்வகமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஒரே அணியாக மும்பை உள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோரின் மோசமான பேட்டிங் கருதப்படுகிறது. அவ்வப்போது ரோகித் சர்மா சோபித்தாலும் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்ட் தொடர்ந்து மோசமாக பேட்டிங் செய்துவருகிறார்.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 129 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் பொல்லார்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பொல்லார்ட் குறித்து அவர் கூறுகையில், " திடீரென்று இப்போது பார்க்கையில் மும்பை ஒரு நல்ல அணியாக தெரிகிறது. ஆனால் அந்த அணியில் ஒரு  உடனடி மாற்றம் தேவை. பொல்லார்ட்-க்கு பதில் டெவால்ட் ப்ரீவிஸ் வர வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்க திணறிவரும் பொல்லார்டுக்கு எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

____________

டெவன் கான்வே குறித்து முகமது கைஃப் கருத்து

இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்க போட்டியில் கான்வே-விற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டது.  அதில் அவர் சோபிக்காத காரணத்தால் அதன்பின் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் கடைசி 3 போட்டிகளில் அவரை அணி நிர்வாகம் களமிறக்கியது. அவரும் தன்னை நிரூபித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முஹமது கைப் பாராட்டு  தெரிவித்துள்ளார். டெவன் கான்வே குறித்து அவர் கூறுகையில், " கான்வே ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு பிளேயிங் 11-ல் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் அவர் தற்போது பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து சென்னை அணி அவரை முன்பே இறக்காமல் இருந்ததற்காக வருத்தப்படுவார்கள். அணியின் சிறந்த வீரரை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என கைப் தெரிவித்தார்.

______________

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய குழு காலிறுதிக்கு தகுதி

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை வீழ்த்தினார். இதன்பின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி ஜோடி, ஜேசன் அந்தோணி ஹோ-ஷு மற்றும் கெவின் லீ ஜோடியை எதிர்கொண்டது.  இதில் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி எளிதில் வெற்றி பெற்றது. 

அடுத்த போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரணாய் மற்றும் பி.ஆர். சங்கீர்த் ஆகியோர் விளையாடினர்.  இதில் இந்திய ஜோடி 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் பின்பு 5வது போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷு ரஜாவத் மற்றும் விக்டர் லாய் ஜோடி 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியையும் தன்வசப்படுத்தினார். இதனால், இந்திய அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இந்திய அணி ஜெர்மனியுடனான குழு போட்டியில் 5-0 என வெற்றி பெற்று இருந்தது.  இதனால், காலிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து