முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் இருவரின் நிலை என்ன? - குவாரியில் 3-வது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      தமிழகம்
Nellai-Kalkuvari 2022 05 17

Source: provided

நெல்லை : நெல்லை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் விழுந்த பாறையில் சிக்கியவர்களில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மீட்பு பணிகள் நேற்று 3-வது நாளாக நீடித்த நிலையில் அங்கு சிக்கியிருக்கும் மேலும் இருவரின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் கடந்த 14ந்தேதி இரவு ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் அங்கு கற்களை லாரிகளில் ஏற்றி கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இதில் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த முருகன், நாட்டார் குளத்தைச் சேர்ந்த விஜய் ஆகிய 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட இளைய நயினார் குளத்தைச் சேர்ந்த செல்வம் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 2வது நாளாக அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கல்குவாரியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதும் பாறைகள் சரிந்து விழுந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பாறைகளுக்குள் சிக்கி உள்ள மேலும் 2 பேரை மீட்கும் பணி நேற்று 3வது நாளாக நடைபெற்றது. ஏற்கனவே மீட்கப்பட்ட விஜய், பாறை இடிபாட்டில் சிக்கிய லாரியின் உள்ளே ஒருவர் இருப்பதாகவும், மற்றொருவர் பெரிய பாறைக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் கூறி இருந்தார். அதனடிப்படையில் லாரி இருக்கும் இடத்தில் கிடந்த பாறைகளை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தி பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை.

இதற்கிடையே இடிபாட்டில் சிக்கிய பொக்லைன் எந்திரத்தை சீரமைத்து அதன் மூலம் கற்களை அப்புறப்படுத்தி 2 பேரையும் மீட்கலாம் என்ற கோணத்திலும் மீட்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பொக்லைன் எந்திரத்தை சீராக்க முடியவில்லை. இதையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. புதிதாக ஒரு பொக்லைன் எந்திரத்தை உள்ளே கொண்டு செல்வது கஷ்டம் என்பதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பாறைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் ஒழுகி வருவதால் அந்த பாறைகளின் உறுதித்தன்மையை கண்டறிவதற்காக தனியார் சுரங்கத்துறை மற்றும் மண்ணியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நேற்று விபத்து நடந்த குவாரியை ஆய்வு செய்தனர்.மேலும் திருச்சியில் உள்ள மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர்களும் நேற்று நெல்லைக்கு வந்தனர்.

மேலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் பேரில் மீட்பு பணியை தொடர திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே 50 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் உள்ள நாங்குநேரி காக்கை குளத்தை சேர்ந்த செல்வகுமார், தச்சநல்லூர் ஊருடையார் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரின் கதி என்ன? என்பது குறித்து தெரியாமல் அவர்களது உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!