முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
CM-1 2022-05-20

Source: provided

உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.

 கோடை காலத்தில் நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. முதல்வரால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட உதகை மலர்க்காட்சி திடலில் வண்ண மலர்களான டுலீப், சிம்பிடியம், புரோட்டியா, கேலா லில்லி மற்றும் மேரிகோல்ட் உள்ளிட்ட 275 வகை ரகங்கள் அடங்கிய வண்ண மலர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

மலர்க்காட்சி மாடத்திலுள்ள கொய்மலர்கள் அரங்கினையும், ஹெலிகோனியா மலர் அலங்காரங்களையும், ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுலீப் மலர் செடிகளையும், சுமார் 52 வகையான மலர் செடிகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் மாடங்களையும், காய்கறிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், காட்டெருமை உள்ளிட்ட பிற அலங்காரங்களையும் முதல்வர் பார்வையிட்டார். 

மேலும், குழந்தைகள், சுற்றுலாப்பயணிகள் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் சுமார் 4,500 தொட்டிச் செடிகளின் மூலம் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி மாளிகையினையும், நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான பழங்குடி பெருமக்களான தோடர், இருளர், குரும்பர், பணியர், கோத்தர் மற்றும் காட்டு நாயக்கர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரத்தினையும், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி, ஆந்தை, சுமார் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக மலர் அலங்காரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டிடம், உதகை 200-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை நினைவு கூறும் விதமாக “Ooty 200” என்று மலர்களால் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளதையும், மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை அலங்காரத்தையும், சுற்றுச்சூழல் துறையின் சார்பில் பிளாஸ்டிகிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து அமைக்கப்பட்டுள்ள  விழிப்புணர்வு அரங்கு மற்றும் தனியார் அரங்குகளையும் முதல்வர் பார்வையிட்டார்.  நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வேளாண்மையை எடுத்துரைக்கும் வகையில் இயற்கை வேளாண்மை காட்சி திடல் மற்றும் தமிழ்நாட்டின் தோட்டக்கலை வளத்தை குறிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலைத் துறையின் காட்சித் திடல்களை முதல்வர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், நீலகிரி மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!