முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Anpil Makes 2021 07 26

Source: provided

சென்னை : கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவிக்கவிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதையடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பா் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3-ம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.  இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தோ்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கடந்த 14-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவா்களுக்கு ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

இவை தவிா்த்து, அரசு பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறின.  இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!