முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை விரைந்து மீட்க அறநிலைய துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 25 மே 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக ஆவடி தாலுகா வெள்ளனூரில் 134 ஏக்கர் சொத்து உள்ளது. இதன் மூலம் கோயிலுக்கு எந்த வருமானமும் வரவில்லை. கோயில் சொத்துகள் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்குமாறு இந்து சமய அறநிலையதுறைக்கு 2019 மே 27ம் தேதி மனு அனுப்பினேன். எனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை ஆணையர்,  அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கூடுதல் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் சம்மந்தப்பட்ட கோயில் சொத்துகள் அளவீடு செய்யப்பட்டதாகவும், சொத்துகளில் பல வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக எனக்கு தகவல் வந்தது. உடனே கோயில் மேலாளருக்கு கடந்த 22ம் தேதி மனு அளித்தேன். ஆனால் இதுவரை கோயில் நிலங்களை மீட்கவோ, பாதுக்காகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் நிலங்களை மீட்குமாறு அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’  என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வழக்கறிஞர் ஏற்கனவே அந்த கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் சர்வே செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

கோயில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலம் பல்வேறு மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் நீர் நிலைகளும் அடங்கும். அந்த நிலங்கள் சர்வே செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தெரிவித்துள்ள கோயிலுக்கு சொந்தமான சுமார் 134 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!