முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல்லில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு : முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

நாமக்கல் : உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில், நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டையொட்டி நேற்று நாமக்கல் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட தி.மு.க.வினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 21 மாநகராட்சி, 159 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் தி.மு.க. சார்பிலும், அதன் கூட்டணி கட்சிகள் சார்பிலும் வெற்றி பெற்ற சுமார் 11 ஆயிரம் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கும் உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பிலான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டைமேடு என்ற பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டை காலை 9 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.   இதனைத் தொடர்ந்து மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வரவேற்று பேசுகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை உரையாற்றுகின்றனர். காலை 9.30 மணி முதல் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில் ஆ. ராசா, திருச்சி சிவா, தங்கம் தென்னரசு, சுப.வீரபாண்டியன், பர்வீன்சுல்தானா ஆகியோர் உரையாற்றுகின்றனர். மதியம் 12 மணி உணவு இடைவேளைக்கு பின், வரலாற்றுச் சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாலை 2.30 முதல் 3.30 மணி வரை மக்களோடு நில், மக்களோடு வாழ் என்ற தலைப்பில்  மருத்துவ  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உரையாற்றுகிறார்.

அதன்பின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் உரையாற்றுகின்றனர். பிற்பகல் 4 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றுகிறார். மாநாட்டு நிறைவில் சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் நன்றி கூறுகிறார்.   இந்த மாநாட்டில், பல்வேறு துறை அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

கரூரில் அரசு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நேற்று  சனிக்கிழமை காலை கார் மூலம் நாமக்கல் நோக்கி மதியம் ஒரு மணி அளவில் வந்த முதல்வருக்கு, மாவட்ட எல்லையான கீரம்பூரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சுற்றுலாத் துறை அமைச்சர் எம். மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் , எம்.எல்.ஏ.க்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, வழிநெடுகிலும் திரண்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகைக்கு  முதல்வர் சென்று சேர்ந்தார். அங்கு, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நாமக்கல்லுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கூடுதல் காவல் துறை தலைவர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்   தலைமையில், 13 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 400 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு பகுதியில் வீடியோ, புகைப்படம் எடுக்கும் வகையிலான ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தடை விதித்துள்ளார். நகரப் பகுதிகளில் லாரிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து