முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாறு படைத்த செஸ் ஒலிம்பியாட்: முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு செஸ் வீராங்கனை பாராட்டு

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Thania-Sachdev 2022 08 10

Source: provided

சென்னை : சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்ததற்காகத் தமிழக முதல்வருக்குப் பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். 

 ரூ.100 கோடி செலவில்...

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. தமிழக அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்) சார்பில் ரூ.100 கோடி செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ஹோட்டலில் கடந்த ஜூலை 28-ம் தேதி தொடங்கியது. ஓபன் பிரிவில் 187, மகளிர் பிரிவில் 162 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 11 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 

இந்திய அணிக்கு...

ஓபன் பிரிவில் அதிபன், குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹல் சரின், ருணாக் சத்வனி இடம்பெற்ற இந்திய பி அணி வெண்கலம் வென்றது. மகளிர் பிரிவில் நிறைமாத கர்ப்பிணி ஹரிகா, கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, பக்தி குல்கர்னி, தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்ற இந்திய ஏ அணி வெண்கலம் வென்றது. 

குகேஷ், நிஹல்...

விளையாட்டு வீரர்களின் வெற்றி, ரேட்டிங் அடிப்படையில் வழங்கப்படும் தனிநபர் பதக்கங்களில் இந்திய இளம் வீரர்கள் டி. குகேஷ், நிஹல் சரின் ஆகியோர் தங்கம் வென்றனர். ஏ அணி வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளியும் பி அணி வீரர் பிரக்ஞானந்தா வெண்கலமும் வென்றனர். மகளிர் பிரிவில் தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக், ஆர்.வைஷாலி ஆகியோர் வெண்கலம் வென்றனர். இந்திய அணியினருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார்.

சிறப்பாக இருந்தது...

முதல்வருக்கு நன்றி தெரிவித்து பிரபல செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் டுவிட்டரில் கூறியதாவது., இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி பல காரணங்களுக்காக வரலாறு படைத்துள்ளது. செஸ் உலகை மீண்டும் ஒன்றாக இணைத்ததற்கு நன்றி மு.க. ஸ்டாலின் சார். உங்களுடைய தொலைநோக்கும் விளையாட்டு மீதான ஆர்வமும் முன்மாதிரியாக உள்ளது. சென்னை நகரம் போட்டியைச் சிறப்பாக நடத்தியுள்ளது. வேறு யாரும் இதைவிட சிறப்பாகச் செய்திருக்க முடியாது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து