முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் கோர்ட் நீதிபதி அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      தமிழகம்
IPS 2022-08-19

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் கோர்ட் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். மாயமான ஆவணங்களின் நகலை வருகிற 25-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் சிறப்பு டி.ஜி.பி. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக, பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தின்படி, அப்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 5 பேர் அடங்கிய 'விசாகா' குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு தனது விசாரணையை முடித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக குற்ற குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை.

ஆனால் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடியை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் நேரில் வந்து சாட்சியம் அளித்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் பெண் போலீஸ் அதிகாரி சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.-பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் ஆடியோ உரையாடல், வாட்ஸ்-அப் மெசேஜ் ஆகியவை திடீரென மாயமாகி இருந்தது. 

இதனை அறிந்த நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். மாயமான ஆவணங்களின் நகலை வருகிற 25-ந் தேதி கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது முக்கிய ஆவணங்கள் மாயமானதால் விழுப்புரம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து