முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் : முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
OPS 2022-07-26

Source: provided

சென்னை : தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் செயல் குறித்த வீடியோ வைரலான நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதல்வருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசபுரம் பகுதியில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம், தனியருக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வணிகம் செய்து வருவதாகவும், குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், நிலத்தின் உரிமையாளர் இடத்தை காலி செய்து கொடுக்கும்படி தனியார் நிறுவனத்தை வற்புறுத்தியதாகவும், ஆனால் குத்தகை காலம் முடிவடையாத சூழ்நிலையில் இடத்தை காலி செய்து தர முடியாது என்று தனியார் நிறுவனம் தெரிவித்து விட்டதாகவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மேற்படி இடத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக, தனியார் நிறுவன அதிகாரியை தொலைபேசியில் அழைத்து இடத்தை காலி செய்து தருமாறு தி.மு.க. தாம்பரம் எம்.எல்.ஏ. மிரட்டும் தொனியில் கேட்டுக் கொண்டதாகவும், அங்குள்ள நிறுவன அதிகாரிகளை நாகரிகமற்ற முறையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோவும் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. இது போன்ற செயல் சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு வழி வகுக்கும். இதற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. ஆகவே முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுமாறு அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து