முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல்: நாளை வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Rajeev-Kumar 2022 11 03

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் குஜராத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

18-ம் தேதி நிறைவு...

முன்னதாக கடந்த மாதம் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது குஜராத் தேர்தல் தேதியும் சேர்த்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அறிவிப்பு வெளியானது. குஜராத் சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்ரவரி 18 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

2 கட்டங்களாக...

இந்நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (நவம்பர் 5) முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவ.10ல் தொடங்குகிறது. நவம்பர் 17ல் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 21ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும்.

182 தொகுதிகள்... 

தேர்தல் தேதியை அறிவித்துப் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆயத்தப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நடைமுறைகள் குறித்து விளக்கினார். "மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்காக 51 782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. மாநிலத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத் தளத்திலேயே அமைக்கப்படும். இத்தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 2.53 கோடி ஆண் வாக்காளர்களும், 2.37 கோடி பெண் வாக்காளர்களும் தகுதி பெற்றுள்ளனர்" என்று அவர் அறிவித்தார்.

தக்கவைக்குமா பா.ஜ.க?

குஜராத் தேர்தல் தேதி நேற்று வெளியான சூழலில் அம்மாநில அரசியல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. 5 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் 6வது முறையாக பாஜகவை தக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்து வருகிறது. அதேவேளையில் குஜராத் தேர்தலில் சரித்திரம் படைப்போம். பஞ்சாப்பை போல் கைப்பற்றுவோம் என்று சூளுரைத்து வருகிறது ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அடிக்கடி குஜராத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 

77 இடங்களில்... 

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத் 182 தொகுதிகளில் 99 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தை 6-வது முறையாக பாஜக தக்கவைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அண்மையில் நடந்த மோர்பி நகர் பால விபத்து மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அட்டவணை 

  • 1) மொத்தம் தொகுதிகள் - 182 (2 கட்டங்களாக...).
  • 2) முதல் கட்ட வாக்குப்பதிவு - டிச. 1 (89 தொகுதிகள்).
  • 3) 2-ம் கட்ட வாக்குப்பதிவு - டிச. 5 (93 தொகுதிகள்).
  • 4) வேட்பு மனுத் தாக்கல் - நவ. 5-ம் தேதி (முதல் கட்ட தேர்தல்).
  • 5) வேட்பு மனு திரும்ப பெற - நவ. 17-ம் தேதி (முதல் கட்ட தேர்தல்).
  • 6) வேட்பு மனுத் தாக்கல் - நவ. 10-ம் தேதி (2-ம் கட்ட தேர்தல்).
  • 7) வேட்பு மனு திரும்ப பெற - நவ. 21-ம் தேதி (2-ம் கட்ட தேர்தல்).
  • 8 வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 8-ம் தேதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து