முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னர் ரவியை சந்தித்து மனு அளித்தார்: செஸ் போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      அரசியல்
Annamalai 2022-11-29

ஆன்லைன் ரம்மி அவரச தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு நடைமுறைபடுத்தவில்லை என்றும் செஸ் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் தமிழகம் வந்த போது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்  அண்ணாமலை கூறினார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடந்து இருப்பதாகவும், பிரதமர் மோடி வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று  மனுக்களை அளித்தார்.  இந்த சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- 

உலக செஸ் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். நேரு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார். அவரது பாதுகாப்பில் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடிகள் நடந்துள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யாமல் இருந்துள்ளன. அதன் வழியாகத்தான் எல்லோரும் சென்றுள்ளார்கள். இதுபற்றி மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

 இது பற்றி மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஒரு பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? மங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த 2 மணி நேரத்தில் அது தீவிரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை வெளிப்படையாக கூறியது. ஆனால் கோவையில் நடந்தது குண்டுவெடிப்பு. இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளது என்பதை கண்டுபிடித்தும் இதுவரை தீவிரவாத தாக்குதல் என்பதை சொல்ல காவல்துறை தயங்குகிறது. காரணம் உண்மையை சொன்னால் பதவியில் இருந்து தூக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான். 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது. கவர்னர், சட்டத்துறை, அரசு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து இருப்பவை. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நிரந்தர சட்டத்துக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கவர்னர் மீது தவறான பார்வையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் 6 மாதமாக அரசு ஆணை பிறப்பிக்காதது ஏன்? அதனால்தான் இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தொடருகிறது. 

நிரந்தர தடை சட்டம் கொண்டு வரும் போது சட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தாலும், பிராக்சி என்ற மென்பொருளை நிறுவினால் தடையை தாண்டி விளையாட முடியும். இந்த தொழில்நுட்ப பிரச்சினைகளையும் தடுக்க வேண்டும். இதையெல்லாம் சீர்படுத்த சட்டத்தை கடுமையாக்குவதை விட்டு விட்டு கவர்னரிடம் போட்டி போடுவது ஏன்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் செய்த தவறுகளுக்கெல்லாம் கவர்னர் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். 

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 69 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்ட்டுள்ளதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கணக்கு காட்டி இருக்கிறது. நாங்கள் 3 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் வெளியே குழாய் பொருத்தப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் தண்ணீர் வரும் குழாயே இல்லை என்பதை பார்த்தோம். இந்த திட்டத்தில் பல நூறு கோடி ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கவும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம். 

நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ வீரர் குருமூர்த்தியையும் அவரது குடும்பத்தினரையும் தேச விரோத சக்திகள் மிரட்டி இருக்கிறார்கள். உடனடியாக அந்த வீட்டுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பது பாராட்டதக்கது. அதே நேரம் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து இதுவரை உள்ளே தள்ளாதது ஏன்? எங்கள் கட்சி சார்பிலும் அந்த குடும்பத்தினரை சந்தித்து உறுதுணையாக இருப்போம் என்று கூறி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து