முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2023      தமிழகம்
Vaithlingam 2023 02 04

Source: provided

சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அ.தி.மு.க. பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருந்தது. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் அனுமதித்து அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன் பிறகே வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களை பண்ருட்டி ராமசந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் ஓ. பன்னீர் செல்வம் சார்பில் அறிக்கை ஒன்றை வாசித்தார். 

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பொருத்தவரை, இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கையை மக்கள் முன்னிலையில் நாம் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஒற்றுமையுடன் போட்டியிட வேண்டும் என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்றும் அறிவித்தேன். அதற்கேற்ப சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். அதேபோல், இரட்டை இலை சின்னத்தின் மூலம் அ.தி.மு.க. போட்டியிடுகிற வாய்ப்பு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்களது கருத்துகளை கேட்ட பின்னர்தான் பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எந்தவித தடையும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. 

இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்னோடு அ.தி.மு.க. மீது பற்றுக் கொண்ட தொண்டர்களும் மற்றும் என்மீது நம்பிக்கைக் கொண்ட பொதுமக்களும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அதில் ஓ. பன்னீர் செல்வம் கூறியிருப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்றும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படிதான் இடைத்தேர்தலை சந்திக்க போகிறோம் எனவும் வைத்திலிங்கம் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து