முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் நாளை அ.தி.மு.க, சார்பில் அஞ்சலி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை 3-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும், 4-ம் தேதி உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க .பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பெருங்காமநல்லூரில் கடந்த 3.4.1920 அன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில் நாளை காலை 9 மணிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி சேடபட்டி ஒன்றியம் பெருங்காமநல்லூரில் அமைந்துள்ள வீரத் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும், 

அரசியலிலும், பொது சேவை புரிவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பி.கே. மூக்கையா தேவரின் 101-வது பிறந்த நாளான 4-ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையா தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா. விஸ்வநாதன், செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான்(எ) செல்வம் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்திடுவார். 

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு,மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களை  சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து