முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாஷேத்ரா விவகாரம்: கல்லூரி பேராசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      தமிழகம்
Kalashetra 2023 04 01

Source: provided

சென்னை : கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் அரிபத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் கைது நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும் கலைகளை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்.

இப்படி புகழ்பெற்ற கலாஷேத்ராவில் படித்து வரும் மாணவிகள் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கலாஷேத்ரா நிர்வாகத்திடம் முதலில் புகார் அளித்தனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேராசிரியர் அரிபத்மன், நடன ஆசிரியர்களான சாய் கிருஷ்ணா, சஞ்சித்லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த நிலையில் இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுவதாகவும், புகாருக்குள்ளான நபர்கள் அனைவரும் சுதந்திரமாக சுற்றி திரிவதாகவும் மாணவிகள் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.

இதை தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமானதை அடுத்து ஏப்ரல் 6-ந் தேதி வரை கலாஷேத்ரா கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பாதிப்புக்கு உள்ளான மாணவிகள் யாரும் போலீசில் புகார் அளிக்காமல் தயக்கம் காட்டி வந்தனர்.

இதனால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில் முட்டுக்கட்டை நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான கேரள முன்னாள் மாணவி ஒருவர் போலீசில் துணிச்சலாக சென்று புகார் அளித்தார். அதில் பேராசிரியர் அரிபத்மன் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியது தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தனது தோழியுடன் நேரில் சென்ற அந்த மாணவி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததை தொடர்ந்து உடனடியாக போலீஸ் நடவடிக்கை தீவிரமானது.

மாணவி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தென் சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்ஹா, அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் ஆகியோரது மேற்பார்வையில் மாணவியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடையாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, பேராசிரியர் அரிபத்மன் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 509 ஐ.பி.சி., 354-ஏ மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பேராசிரியர் அரிபத்மன் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் அரிபத்மன், கலாஷேத்ரா கல்லூரியில் கேரள மாணவியை போன்று எத்தனை பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்? என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை பற்றி அறிந்ததும் வெளியூர் சென்றிருந்த அரிபத்மன் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் உடனடியாக சென்னை திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை தொடர்ந்து மகளிர் போலீசார் அரிபத்மனிடம் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளனர். கல்லூரிக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது. போலீஸ் பிடி இறுகி இருப்பதை தொடர்ந்து பேராசிரியர் அரிபத்மனை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து