முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தூத்துக்குடியில் பிரதமர் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Modi 2023-05-10

தூத்துக்குடி, தூத்துக்குடியில் ரூ. 17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும்,  பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த வகையில் நேற்று முன்தினம் திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.  பின்னர் மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற MSME டிஜிட்டல் வர்த்தக கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.  பின்னர் இரவு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதையடுத்து நேற்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி நலத் திட்டங்களைத் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.

பிரதமர் மோடி அடிக்கல் மற்றும் திறந்து வைத்த திட்டங்கள் வருமாறு., தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை,  ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடக்கம்.

முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீர்வழிக் கப்பலின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது. வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் ரயில் பாதை,  வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  சுமார் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம்,  கன்னியாகுமரி, நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.

4 சாலைத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  தேசிய நெடுஞ்சாலை 844-இல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை,  தேசிய நெடுஞ்சாலை 81-இல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை,  தேசிய நெடுஞ்சாலை 83-இல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை,  தேசிய நெடுஞ்சாலை 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூர் இடையே இருவழிப் பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமார் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி,  மத்திய அமைச்சர்கள் சர்பானந்தா சோனோவால், எல்.முருகன்,  தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து