முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Udhayanidhi 2024-04-17

Source: provided

திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், கோவை பாராளுமன்றத் தொகுதி இன்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

இந்தியாவில் காலை உணவு என்ற சிறந்த திட்டத்தை கொண்டு வந்த ஒரே முதல்-அமைச்சர் நமது தமிழ்நாடு முதல்அமைச்சர்தான். காலையில் சீக்கிரம் வேலைக்குப் போகும் பெற்றோர்கள் குழந்தை சாப்பிட்டானா, இல்லையா என கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது காலை உணவு மற்றும் கல்வியை தந்து குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்கிக் கொண்டிருப்பது தான் திராவிட மாடல் அரசு, தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைகின்றனர். இந்த கூட்டத்திற்கு மகளிர் அதிகமாக வந்துள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளீர்கள் கைகளை தூக்குங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது கொரோனா காலம். அதையெல்லாம் தாண்டி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஒரு கோடியே 18 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை இன்னும் விரிவுபடுத்தி அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியை இனி மோடி என்று கூப்பிட வேண்டாம். நான் செல்ல பெயர் வைத்துள்ளேன் 29 பைசா என்ற படம் பொறித்த அட்டையை காட்டி இதுதான் அந்தப் பெயர் என்ன காரணம் என்றால், தமிழ்நாடு அரசு வரியாக மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் செலுத்தினால் திரும்பத் தருவது 29 பைசா மட்டுமே, ஆனால் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் செலுத்தினால் 7 ரூபாய் தருகிறார்கள். உத்திரப்பிரதேசத்திற்கு 3 ரூபாய் தருகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் 29 பைசா தான், இதில் தமிழ்நாடு மேல் தனி பாசம் உள்ளது என்று மோடி மேடைக்கு மேடை பேசுகிறார்.கொரோனா வந்த போது வரவில்லை, வெள்ளம் வந்தபோது வரவில்லை. இப்பொழுது தேர்தலுக்கு மட்டும் அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்.

கொரோனா காலத்தில், விளக்கு பிடியுங்கள், மணி அடியுங்கள் என 29 பைசா மோடி கூறினார். ஆனால் நோயாளிகள் வார்டுக்கே சென்று அவர்களுக்கு தைரியம் சொன்ன ஒரே முதல்-அமைச்சர் இந்தியாவில் ஸ்டாலின் மட்டுமே, ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் துயரப்படும் போது வராத ஒருவர், ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். தமிழ்நாட்டில் 22 நாட்கள் பிரசாரத்தை முடித்துவிட்டு கடைசி நாளாக கோயமுத்தூருக்கு வந்துள்ளேன். ஏனென்றால் கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம்.

தமிழ்நாட்டு மக்களை பா.ஜ.க.,விடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் நாளை நடைபெற உள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் அளிக்கும் ஓட்டு தான், மோடிக்கு வைக்கும் வேட்டு. ஜி.எஸ்.டி வரி குறித்து கேட்ட இளம்பெண்ணை திருப்பூரில் பா.ஜ.க.,வினர் தாக்கினர். ஜி.எஸ்.டி. என்பது வரி கிடையாது அது ஒரு வழிப்பறி கொள்ளை. திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில்களையும், வணிகர்களையும் சாகடித்தது ஜி.எஸ்.டி. வரிதான்.கல்வி உரிமை முதலில் மாநிலப் பட்டியலில் இருந்தது அ.தி.மு.க. ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து