முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Karnataka 2024-04-22

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 26-ந் தேதி மற்றும் மே 7-ந் தேதி என 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக வருகிற 26-ந் தேதி 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது கட்டமாக மே மாதம் 7-ந்தேதி பெலகாவி, பல்லாரி, தாவணகெரே, சிவமொக்கா, பாகல்கோட்டை, கலபுரகி உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடந்தது. அதன்படி, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, மந்திரிகள் லட்சுமி ஹெப்பால்கரின் மகன், சதீஸ் ஜார்கிகோளியின் மகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2-ம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 335 வேட்பாளர்கள் 503 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

2-ம் கட்ட தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த 3 தினங்களுக்கு முன்த பரிசீலனை நடைபெற்றது. இதில், 109 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. 272 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாளாகும். நேற்று 14 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக முன்னாள் மந்திரி ஈசுவரப்பா போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதுபோல், உப்பள்ளி-தார்வார் தொகுதியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை எதிர்த்து திங்களேஷ்வரர் மடாதிபதியும் மனு தாக்கல் செய்துள்ளார். அவர்களது போட்டியால் பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சிவமொக்கா தொகுதியில் ஈசுவரப்பா சுயேச்சையாக போட்டியிடுகிறார். பா.ஜனதா கட்சியில் இருந்து அவர் விலகவும் இல்லை, அக்கட்சியும் ஈசுவரப்பாவை இன்னும் நீக்கவும் இல்லை. அதே நேரத்தில் வேட்புமனுவை திரும்ப பெறாவிட்டால், கட்சியில் இருந்து ஈசுவரப்பா நீக்கப்படுவார் என்று பா.ஜனதா மேலிடம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஈசுவரப்பா தனது மனுவை வாபஸ் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து