முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      விளையாட்டு
Gujarat-wins 2024-03-31

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. கில், சாய் சுதர்ஷன் மற்றும் ராகுல் தெவாட்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் குஜராத் அணியின் வெற்றிக்கு உதவினர்.

37 லீக் போட்டி... 

ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.

ஹர்ப்ரீத் ப்ரார்... 

இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங்  விக்கெட்டை பறிகொடித்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.

143 ரன் இலக்கு...

அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிது.  கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாஹா இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். சாஹா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்ஷன் களத்துக்கு வந்தார். 35 ரன்கள் எடுத்த நிலையில் கில் அவுட் ஆனார். அவரை லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். தொடர்ந்து மில்லர், சாய் சுதர்ஷன், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

குஜராத் வெற்றி...

சாய் சுதர்ஷன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து பொறுப்புடன் ஆடினர். ஹர்ஷல் படேல் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்களை கைபற்றினார். ஷாருக் மற்றும் ரஷித் கானை அவர் அவுட் செய்தார். 19.1 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குஜராத். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணிக்காக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்கள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்கள், அர்ஷ்தீப் மற்றும் சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் வென்றார்.

சுப்மன் கில் பேட்டி...

வெற்றி பெற்ற பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை நாங்கள் முன்கூட்டியே முடிக்க நினைத்தோம். ஆனால் போட்டி மைதானத்தின் தன்மை காரணமாக கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில் இந்த இரண்டு புள்ளிகளை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. கேப்டன்சி செய்வது உண்மையிலேயே எனக்கு ஆர்வமாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நான் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாட விரும்புகிறேன். பேட்டிங் செய்யும் போது கேப்டன்சி பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது. லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்து விட்டேன். எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களின் சரியான பங்களிப்பினாலே இந்த வெற்றி கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

சாம் கர்ரன் பேட்டி...

தோல்வி அடைந்த பின்னர் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 - 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம். அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் இது போன்று தொடர்ந்து போட்டிகளை தோற்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து