முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சி திட்டங்களுக்கு சான்றோர் பாராட்டு: தமிழ்நாடு அரசு பெருமிதம்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்ச் சான்றோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும் அறிவுயரும் அறமும் ஓங்கும்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய வரிகளை இதயத்தில் ஏந்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழை ஆட்சி மொழியாக்கிட அரும்பாடுபட்டு வருவதோடு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக உலகத்தின் முதுமொழியாம் அமுதமெனும் தமிழ்மொழியை உயர்த்துதல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல்,

அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவித்தல், மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்றோதல், தமிழ்க் கூடல், தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம். தமிழ் பரப்புரைக் கழகத்தின் வாயிலாக அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்கு தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி திங்கள் 12 ஆம் நாள் அயலகத் தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1970-ஆம் ஆண்டு முதல் ‘நீராரும் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக நடைமுறையில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, முதல்வர் கணினித் தமிழ் விருது. தமிழ்ச்செம்மல் விருதுகள், இலக்கண விருது, இலக்கிய விருது, தூயத் தமிழ் பற்றாளர் விருதுகள் உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம்வழங்கிட ஆணையிட்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் 260 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புதியதாக உருவாக்கப்பட்டு பொதுத் துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

தமிழறிஞர்களின் படைப்புகள் எளிய முறையில் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்திடும் வகையிலும், தமிழறிஞர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட புகழ் வாய்ந்த 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

1.1.2000 ஆம் ஆண்டு குமரிமுனையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் “குறள் முற்றோதல்” திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 இலட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இன்பத் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மீது கொண்டுள்ள தீராப் பற்றுதல் உலகுக்குப் பறைசாற்றுவதாக அமைந்து, அவருக்குப் புகழ் சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தமிழ்நாட்டில் முதன்முறையாக பார்போற்றும் வகையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கியும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப்பணித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து