முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு மத நம்பிக்கை கிடையாது : அண்ணாமலைக்கு சசிகலா பதில்

சனிக்கிழமை, 25 மே 2024      தமிழகம்
Sasikala 2023-04-27

Source: provided

சென்னை : "ஜெயலலிதாவுக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததே தவிர, மத நம்பிக்கைக் கிடையாது. அவரை குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முடியாது” என அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக டெல்லி சென்றுள்ள அண்ணாமலை அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்துத்துவ கொள்கைகளை பின்பற்றியவர் என்றும் அவரது மறைவுக்குப் பின்னர் அதிமுக அதில் இருந்து விலகி விட்டதாகவும் பேசினார்.

இதனால், ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது என்றும் அதிமுக ஆதரவாளர்கள் பாஜக பக்கம் திரும்பியுள்ளனர் என்றும் கூறினார். இதற்கு அதிமுகவைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்போது, அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சசிகலா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிடுவது அவருடைய அறியாமையை, புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சாதி, மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ’மக்களால் நான்... மக்களுக்காகவே நான்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த மக்கள் தலைவர். பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர்.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி புரட்சித்தலைவி அம்மாதான் என்பது நாடறிந்த உண்மை. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்திருந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது’ என அந்த நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து