முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் இந்தியாவில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை

புதன்கிழமை, 29 மே 2024      இந்தியா
Amit-Shah 3

Source: provided

புதுடெல்லி : தென் இந்தியாவில் கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க. மிகப்பெரிய  வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமித் ஷா அளித்துள்ள நேர்காணலில், “ மேற்கு வங்கத்தில் நாங்கள் 24 முதல் 30 இடங்களில் (மொத்தம் 42 தொகுதிகள்) வெற்றி பெறுவோம். ஒடிசாவில், எங்கள் இலக்கு 17 தொகுதிகள் (மொத்தம் 21 தொகுதிகள்) ஆகும். அதேபோல ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற இடங்களில் 75 இடங்களில் வெற்றி பெறுவோம். தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 இடங்களில் 10 தொகுதிகளில் வெல்வோம். ஆந்திராவை பொறுத்தவரை, எங்கள் கூட்டணி சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும்,மக்களவைத் தொகுதிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவோம்” என்றார்

தொடர்ந்து பேசிய அவர், “கிழக்கு மண்டலத்தில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசாவை உள்ளடக்கிய மாநிலங்களில் நாங்கள் மிகப்பெரிய கட்சியாக உருவெடுப்போம், இது உறுதி. தெற்கு மண்டலத்தில், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய கட்சியாக வெற்றி பெறுவோம்.

400 இடங்களில் வெற்றி என்பது வெறும் கோஷம் இல்லை. 2014 தேர்தலில் நரேந்திர மோடியின் தலைமையில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மை பெறுவோம் என்றபோது, டெல்லியைச் சேர்ந்த பல அரசியல் ஆய்வாளர்கள் நம்பவில்லை. 2019-ல் 300+ இடங்களில் வெல்வோம் என்றபோது, அதனையும் அவர்கள் நம்பவில்லை. இப்போது 400 இடங்களில் வெல்வோம் என்பதையும் அடுத்த தேர்தலில்தான் நம்புவார்கள்” என்று அமித் ஷா கூறினார்.

மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இவற்றில் 26 தொகுதிகள் கிழக்கு மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ளன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து