முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 4 இடங்களில் பா.ஜ.க. பிரமாண்ட மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      தமிழகம்
Modi 2023 07 30

Source: provided

மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடந்த ஆண்டு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 7-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், தற்போதைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது.

தி.மு.க. தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் உற்சாகப்படுத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறந்த எதிர்காலத்துடன் பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 4-ம் கட்ட பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துக்கள் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் அதனை தவிர்த்துவிட்டு தனது எழுச்சி பயணத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், தி.மு.க.வின் ஆட்சி, அவலங்கள் குறித்து பொதுமக்களிடமும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்திட தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, தி.மு.க.வின் கனவுகள் தவிடு பொடியாக் கப்படும். பிரதமராகும் ராகுல்காந்தியின் கனவும், தமிழ்நாட்டில் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவும் பலிக்காது என்றார். அத்துடன் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் வெளியேறியது, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு என்று ஒருபுறம் அந்த கூட்ட ணியில் பரபரப்பு காட்சிகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து உடம் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் சமரசம் பேச நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

மேலும், காலம் இருக்கிறது, நம்முடைய நோக்கமும், டி.டி.வி.தினகரனின் நோக்கமும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதுதான். தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும். இதே தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இப்பொழுதுதான் மாநில தலைவராக இருந்து கட்சியை பலப்படுத்துகிற வேலையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு, சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணியின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மாநில மாநாடுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த மாநாடுகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது முதலே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. நடத்தும் மாநாட்டில் பிரதமரை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து