நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகார் குறித்து விளக்கம் தர உத்தரவு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      இந்தியா

 

புதுடெல்லி,பிப்.19

நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகார் குறித்து விளக்கம் தர சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு.

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசு வழக்கறிஞர் வாகனவதிக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி.பாலகிருஷ்ணன். தற்போது அவர் இந்திய மனித உரிமை கமிஷன் தலைவராக இருக்கிறார். உயர் பதவியில் இருக்கும் இவரின் சகோதரர் மற்றும் மருமகன்கள் மீது முறைகேடான சொத்துக்குவிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இதனையொட்டி கேரள ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞராக இருந்த கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இருந்தபோதிலும் உறவினர்கள் மீது சொத்துக்குவிப்பு புகார் எழுந்திருப்பதால் கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர்களின் சொத்து விபரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், புகார் மனு தாக்கல் செய்தார். இந்த புகார் மனு துணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த புகாரின் தன்மை என்பது குறித்து அட்டரினி ஜெனரல் ஜி.இ.வாகனவதிக்கு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான பெஞ்ச் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: