முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வேட்புமனு தாக்கலின் போது தி.மு.க.வினர் கல்வீச்சு

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி, மார்ச் 25 - நேற்று ஸ்ரீரங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வரவேற்க திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மீது தி.மு.க.வினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் போலீசாரோ கல்வீசிய தி.மு.க.வினரை விட்டுவிட்டு அ.தி.மு.க.வினர் மீதே தடியடி நடத்தியதால் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருச்சி ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக நேற்று காலை ஜெயலலிதா திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்தனர். சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதா வாழ்க எனக் கோஷமிட்டனர். 

இதற்கிடையில் திருச்சி மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது அங்கு அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.  இது தி.மு.க.வினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் சாலையில் கொட்டியிருந்த ஜல்லிக் கற்களை எடுத்து அ.தி.மு.க.வினர் மீது சரமாரியாக வீசி  தாக்கினார்கள். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட போலீசார்  கல்லெறிந்த தி.மு.க.வினரை விட்டுவிட்டு அ.தி.மு.க.வினர்தான் கற்களை எறிந்ததாக நினைத்து அங்கு திரளாக   கூடியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் மீது கடுமையான  தடியடி நடத்தினார்கள். 

இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள்  நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேசியபின்பு பிரச்சனை முடிந்தது. 

இப் பிரச்சனைக்கு முன்பு ஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இருப்பினும் தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் கூலிப்படையினர் அ.தி.மு.க.வினர் மீது கல் வீசியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony