முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சயீது தலைக்கு ரூ.50 கோடி பரிசு: அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 4 - மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி டாலர்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. ஆனால் கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அவர் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார். ஹபீஸ் சயீதுவை விடுதலை செய்ததற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஹபீஸ் சயீதுவை பிடிக்க துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ. 50 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் பல தீவிரவாத தலைவர்களின் தலைக்கும் அமெரிக்கா பரிசுத் தொகை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்