முக்கிய செய்திகள்

தமிழ் சினிமா படபிடிப்புகள் தொடங்கின

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டதையடுத்து நேற்று படப்பிடிப்புகள் துவங்கின.  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர் சங்கமான பெப்சிக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினையில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. அதையொட்டி பெப்சி வேலை நிறுத்தத்திற்கு அறை கூவல்விட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நேற்று முன்தினம்  தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெப்சி சங்க நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசினார். இதில் சமரசம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது: பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இரு தரப்பினருக்கும் அறிவுரை வழங்கினார். பெப்சி தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயாரிப்பாளர் சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் அமைச்சர் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பெப்சி அறிவித்தது. வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து  பெப்சியில் இடம் பெற்றுள்ள 23 சங்கங்களின் தொழிலாளர்களும் நேற்று வேலைக்கு திரும்பினர். வேலை நிறுத்தத்தினால் நின்று போன 35 படங்களின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின. நடிகர், நடிகைகள் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: