முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி அருகே 700 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

வியாழக்கிழமை, 31 மே 2012      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி மே.30 - தருமபுரி அருகே வாகன சோதனையில் போலி மதுபானம் தயாரிக்கும் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மதுபானம் தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருட்களுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுரோடு என்ற இடத்தில் நேற்றுமுன் தினம் இரவு தருமபுரி மாவட்ட மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி நோக்கி வேகமாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் போலி பிரந்து பாட்டில்கள் 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த வாகனத்தை ஓட்டி வந்த காவேரிப்பட்டணம் அருகே உள்ள வெள்றம்பட்டியை சேர்ந்த குமார்(33), மற்றும் அவருடன் வந்த கிருஷ்ணகிரி கோடியூரைச்சேர்ந்த அம்மாசி என்கிற ராகவன்(35), மற்றும் பாலகுறியை சேர்ந்த காளியப்பன்(30), ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். 

இந்த விசாரணையில் காளியப்பன் பருகூர் அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் போலியான மதுபானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுவிலக்கு போலீசார் அதிரடியாக அந்த பண்ணை வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கிருந்து 300 போலி மதுபாட்டில்கள் 35 லிட்டர் கேனுடன் எசன்ஸ், 15 லிட்டர் எரிசாராயம் பாட்டில்களில் மூடி பொருத்தும் இயந்திரம், பாட்டில் மூடிகள் 1000 போலி லேபில்கள் 900 ஆகியவற்றை கைப்பற்றி அங்கிருந்த பாலகுறியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, குருபர அள்ளி எண்ணெக்கெல்புதூரைச் சேர்ந்த அணிசந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய பருகூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். வாகனத்துடன் கைப்பற்றப்பட்ட போலி மதுபான பாட்டில்கள் இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!