முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர் சாமியின் தம்பி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.3 - தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க கூடாது என்று திருவொற்றியூர் தொகுதி, கே.வி.குப்பம் வாக்களர்களை அமைச்சர் சாமியின்  தம்பி அடியாட்களுடன் வந்து  மிரட்டுவதாகவும், பாதுகாப்பு தரும்படி  வாக்காளர்கள் கோர்ட்டில் மனு அளித்துள்ளனர்.

இதுபற்றி தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் ஏப்.11-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூர் தொகுதி கே.வி.குப்பம் மீனவ கிராமத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பாக இக்கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் அஞ்சப்பன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவொற்றியூர்  தொகுதிக்குட்பட்ட கே.வி.குப்பத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தினர் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்காததால் தொகுதி எம்.எல்.ஏ.வான  அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பி கே.பி.பி.சங்கர் அடியாட்களுடன் வந்து கிராம மக்களை தாக்கி விரட்டி அடித்தனர். இதனால் கே.வி.குப்பத்து மக்கள் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியேறினர். இதையடுத்து சென்னை ஐகோர்ட் தலையீட்டின் பேரில் கிராம மக்கள் மீண்டும் கே.வி.குப்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்டனர். 

இந்த நிலையில் மீண்டும் கே.பி.பி.சாமி திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக யாரும் செயல்படக் கூடாது என்று கூறி அமைச்சரின் தம்பி மற்றும் அவரது அடியாட்கள் கிராம மக்களை மிரட்டி வருகின்றனர். இக்குப்பத்தை சேர்ந்த மேகவர்ணம் உள்ளிட்ட 5 பேரை அமைச்சரின் தம்பி அடியாட்களுடன் வந்து தாக்கி விட்டு சென்றார். 

இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசில் அமைச்சரின் தம்பிக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அமைச்சரின் ஆதரவாளர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்களுக்கு ஆதரவாக மாநில போலீசும், உயர் அதிகாரிகளும் செயல்படுகின்றனர்.  ஏனெனில் கே.வி.குப்பத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க. கட்சியை சாராதவர்களாவர். ஆகவே தேர்தலின் போது கே.வி.குப்பம் மக்கள் பயமின்றி வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.  

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் செல்வி ஜார்ஜ் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனு குறித்து ஏப்ரல் 11-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony