முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் -ஜெயலலிதா

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

தூத்துக்குடி ஏப்- 4 - ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் அ.தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜா,ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும்  புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான எனது உயிரினும் மேலான எனதருமை உடன்பிறப்புக்களே, வாக்காள பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். 

வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையோடு உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரும், அவரது அமைச்சர்களின் குடும்பங்களும் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்களாக மாறியிருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் நான் உங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு, எந்த பொருளையும் வாங்க முடியாத விலையேற்றம், ஊர்ஊருக்கு ரவுடிகள் சாம்ராஜ்யம், மணல்கொள்ளை, அரிசி கடத்தல், சமூகத்தில் யாருமே எந்த தொழிலும் செய்யமுடியாதபடி அச்சுறுத்தல், அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என்று அராஜகம் தலைவிரித்தாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. 

எனவே இந்த தேர்தலில் தமிழக்தை மீட்டெடுக்கவில்லையென்றால் எப்போது மீட்டெடுக்க போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மை பார்த்து கேட்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல்மூலம் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கும் தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது என்று நாடே காத்திருக்கிறது. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திடவேண்டும். தானும் தனது குடும்பத்தாரும் மக்களை சுரண்டி எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று திட்டமிடுபவர் கருணாநிதி. 

இதற்கு எடுத்துகாட்டாக ரூ.2ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை இலவசமாக வழங்கிவிட்டு அந்த குடும்பத்திலிருந்து கேபிள் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1000 அவரது குடும்பத்தினர் பெறுகின்றனர். கருணாநிதியின் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் விளக்க இது ஒன்றே போதும். சுதந்திர போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை போராடி விரட்டினோம், இப்போது கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளை கும்பலை தேர்தல்மூலம் விரட்டியடிக்கவேண்டும். கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் உலக பணக்காரர்களின் வரிசையில் 310வது இடத்தில் இருக்கிறார். ஒருவருக்கே இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால் அவரது மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்தால் உலக உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் இருக்கும். தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்றதற்கு இது போன்ற ஊழல்தான் காரணம். 

இந்த தேர்தலில் கின்னஸில் இடம்பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் இடத்தில் எல்லாம் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இதுவே உங்களை சுரண்டிய மனிதருக்கு சரியான தண்டனை மக்கள் கொடுத்துள்ளனர் என்று உலகம் உங்களை பாராட்டும். புரட்சித்தலைவர் நல்லாசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை போக்க 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 4வது குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைக்கப்படும், கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எந்திர மீன்பிடி படகு வாங்க மானியம் வழங்கப்படும், தூத்துக்குடியில் 13 இடங்களில் குளிர்பதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

மீன்பிடி இல்லாத 45 நாட்கள் மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்கப்படும், பருவகாலமான 4 மாதங்கள் மீன்பிடி இல்லாத நேரத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4ஆயிரம் நிதி வழங்கப்படும், இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், திருச்செந்தூர் நாசரேத் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், மணல் மாதாகோவில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும். 

மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், நிலமற்ற ஏழைகளுக்கு 3செண்ட் நிலம் வழங்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 3லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1.80லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ட்டு மக்களுக்கு குறைந்தகட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும், விவசாயிகளுக் இலவச சொட்டு நீர் பாசானம் அமைத்து கொடுக்கப்படும், விவசாய இடுபொருட்கள், விதைகள் தங்ளுபடி விலையில் வழங்கப்படும், ஏழை எளிய மக்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் மற்றும் ரவுடி கும்பல்களால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், ரவுடி கும்பல்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony